சட்டவிரோத பந்தல் விவகாரத்தில் மதச்சார்பற்ற நிலையை கையாள வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது ஒலிமாசு விதிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், சட்டவிரோத பந்தல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மும்பை ஐகோர்ட்டில் விசாரணை.
மும்பை,
திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது, ஒலிமாசு விதிமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், சட்டவிரோத பந்தல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரியும் மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, ஏ.கே.மேனன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தானே மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘ஏற்கனவே, சட்டவிரோத பந்தல்களை அகற்றுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, திருவிழா கொண்டாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக பார்க்கப்படுகிறது’’ என்று வாதிட்டார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள் கூறியதாவது:–
திருவிழா கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கமாட்டோம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு, திருவிழாக்களை கொண்டாடுங்கள் என்று தான் சொல்கிறோம். பந்தல்களை அனுமதி இன்றி சட்டவிரோதமாக அமைக்க மாநகராட்சிகள் கண்மூடித்தனமாக அனுமதிக்கின்றன.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மதச்சார்பற்ற நிலையை கையாள வேண்டும். பொதுமக்களின் உணர்வுடன் விளையாடாதீர்கள். சட்டவிரோத பந்தல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதினால், போலீசாரின் உதவியை நாடுங்கள்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.