ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம்


ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2017 2:15 AM IST (Updated: 11 Nov 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 2–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.

தேரோட்டம்

9–ம் திருநாளான நேற்று வணிக வைசிய சங்கம் சார்பில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. பின்னர் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார்.

காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். மூப்பன்பட்டி தேர்தடிமுறைதாரர்கள் தேருக்கு தடி போட்டனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 11 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வாணியர் பேரவை பொதுச்செயலாளர் செல்வம், செயலாளர் கல்யாணகுமார், வணிக வைசிய சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர்கள் வேல்முருகன், மணிமாறன், வணிக வைசிய நடுநிலைப் பள்ளிக்கூட செயலாளர் வெங்கடேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கல்யாணம்

10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) காலையில் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, இரவில் ரி‌ஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 11–ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார்.

12–ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி– அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினபிரவேசம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணிய ராஜன், உதவி ஆணையரும் தக்காருமான ரோஜாலி சுமதா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story