தொழில் அதிபர், மரவியாபாரியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2–வது நாளாக சோதனை


தொழில் அதிபர், மரவியாபாரியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2–வது நாளாக சோதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 4:45 AM IST (Updated: 11 Nov 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்த தொழில் அதிபர், மர வியாபாரி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 2–வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

கோவை,

 சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். நேற்று 2–வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடந்தது. இந்த எஸ்டேட் கட்டுமான பணியின்போது சில பணிகளை கோவையை சேர்ந்த தொழில் அதிபரான ஓ.ஆறுமுகசாமி மேற்கொண்டுள்ளார். அதுபோன்று மரவியாபாரியான சஜீவன் கோடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் வேலைகளை செய்து கொடுத்துள்ளார்.

தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் அலுவலகம் ராம்நகர் சென்குப்தா வீதி, கோவை–அவினாசி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 6–வது தளத்திலும் உள்ளன. அவரது வீடு கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ளது. அந்த 3 இடங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள்.

சஜீவனுக்கு போத்தனூரில் மரக்குடோன் மற்றும் ஷோரூமும், ஆர்.எஸ்.புரத்தில் ஒரு ஷோரூமும் உள்ளது. இந்த 3 இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆறுமுகசாமி, சஜீவன் ஆகியோருக்கு சொந்தமான 6 இடங்களில் நேற்று காலையில் இருந்து 2–வது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.

சோதனை நடைபெற்ற போது, வீடு மற்றும் அலுவலகங்களுக்குள் யாரையும் அதிகாரிகள் அனுமதிக்க வில்லை. பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் வெளியே நிறுத்தப்பட்டு இருந்தனர். அதுபோல் வீட்டில் இருக்கும் யாரையும் செல்போன் பேச அனுமதிக்க வில்லை. அங்கு இருக்கும் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் 6 அதிகாரிகள் தலைமையில் மொத்தம் 20 பேர் ஈடுபட்டனர். ஆறுமுகசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று மாலை 6.30 மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் வெளியேறினார்கள். அவர்கள் அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வெளியே வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. அதுபோன்று சஜீவனின் குடோன் மற்றும் பர்னிச்சர் ஷோரூம்களிலும் சோதனை முடிந்தது.

மேலும் தொழில் அதிபர் ஆறுமுகசாமி அலுவலகத்தில் சோதனை நடைபெற்ற போது, பெண் அதிகாரி ஒருவர் திடீரென்று மயங்கினார். இனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சக அதிகாரிகள் அந்த பெண் அதிகாரியை மீட்டு, சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


Next Story