வேணுகோபால் மீதான புகாரில் உண்மை இல்லை என்னையும், சித்தராமையாவையும் பிரிக்க முடியாது பரமேஸ்வர் பேட்டி
வேணுகோபால் மீதான புகாரில் உண்மை இல்லை என்றும், என்னையும், சித்தராமையாவையும் பிரிக்க முடியாது என்றும் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
வேணுகோபால் மீதான புகாரில் உண்மை இல்லை என்றும், என்னையும், சித்தராமையாவையும் பிரிக்க முடியாது என்றும் பரமேஸ்வர் கூறினார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
சூரியசக்தி மின்சார திட்டம்எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் மீது சூரியசக்தி மின்சார திட்ட முறைகேடு குறித்த புகாரை நடிகை சரிதா நாயர் கூறினார். ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். சரிதா நாயர் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கேரளா ஐகோர்ட்டு, இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும், இந்த வழக்கை அனுமதிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.
கோர்ட்டு மீது நம்பிக்கை இல்லை என்று சரிதா நாயர் கூறியுள்ளார். அரசியல் உள்நோக்கத்தில் இந்த புகார் கூறப்பட்டது. இதில் உண்மை இல்லை. வேணுகோபாலின் அரசியல் புகழை கெடுக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேலிட பொறுப்பாளராக வேணுகோபால் பதவி ஏற்ற பிறகு, கர்நாடகத்தில் காங்கிரஸ் மேலும் பலம் அடைந்துள்ளது. இதை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
மக்களை திசை திருப்ப முயற்சிபா.ஜனதாவினால் நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. பா.ஜனதா ஆட்சியில் மந்திரிகள் என்னவெல்லாம் செய்தனர், சட்டசபையில் அவர்கள் செய்தது பற்றி நான் விரிவாக சொல்ல விரும்பவில்லை. வேணுகோபால் மீதான புகாரை வைத்து பா.ஜனதாவினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். கோர்ட்டில் வேணுகோபால் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகாரால் காங்கிரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
பா.ஜனதாவினர் நடத்தும் மாற்றத்திற்கான பயணத்திற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. நான், முதல்–மந்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து அரசியல் வியூகத்தை வகுத்து வருகிறோம். இதுவரை 13 மாவட்டங்களுக்கு சென்று அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம். சித்தராமையாவுக்கும், எனக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை.
பிரிக்க முடியாதுசித்தராமையா செல்லும் இடத்திற்கு நான் செல்கிறேன். நான் செல்லும் பகுதிக்கு சித்தராமையா வருகிறார். நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், என்னையும், சித்தராமையாவும் பிரிக்க முடியாது. திப்பு ஜெயந்தியை எதிர்த்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்துகிறார்கள். முன்பு எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் திப்பு சுல்தானின் செயல்பாடுகளை புகழ்ந்து தள்ளினர். இப்போது அவர்கள் திப்பு ஜெயந்தியை எதிர்க்கிறார்கள். இது சரியா?. இப்படி எல்லா விஷயங்களிலும் பா.ஜனதாவினர் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.