காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பழுதடைந்த கப்பல்களை உடைக்க மீனவர்கள் எதிர்ப்பு


காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பழுதடைந்த கப்பல்களை உடைக்க மீனவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 4:45 AM IST (Updated: 11 Nov 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பழுதடைந்த கப்பல்களை உடைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள், கப்பல்கள் உடைக்கப்படுவதால் விஷவாயு கசியும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ராயபுரம்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார்ப்பு பகுதியில், இவர்களின் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வார்ப்பு பகுதியில், பழுதடைந்த மீன்பிடி கப்பல்கள் நிறுத்தப்பட்டு, அவற்றை உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, பாரதிய மீனவ கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன், கூறியதாவது:-

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கடற்கரை மண்டல ஒழுங்கு முறை அறிவிப்பாணையின் விதிகளை மீறி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், ‘ரைசிங் சன்’ என்ற மீன்பிடி கப்பல் உடைக்கப்பட்டு வருகிறது. மேலும், ‘ரைசிங் ஸ்டார்’, ‘ஓசன் மைட்டி’ ஆகிய மேலும் 2 கப்பல்களும் உடைக்கப்பட உள்ளது.

கப்பல்கள் உடைக்க அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் அந்த பணியை செய்ய வேண்டும். கப்பலை உடைக்கும் முன்பு, அதில் நச்சு கழிவுகளான பாதரசம், ஆஸ்பிடாஸ் ஆகியவற்றை அகற்ற, அதன் உரிமையாளர் முன்வர வேண்டும். கப்பலை உடைக்கும் முன்பு, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழுதடைந்த கப்பல்கள் உடைக்கப்படுவதால் விஷவாயு கசியும் அபாயம் உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே காலாவதியான மீன்பிடி கப்பலை உடைக்கப்படுவதை உடனடியாக மீன் வளத்துறை தடுத்து நிறுத்த, மாநில அரசை வலியுறுத்துகிறோம்.

வார்ப்பு பகுதிக்கு, அந்த கப்பல்களை கொண்டு வரும்போதே, மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், மீனவர்களின், வாழ்வாதாரத்தில் விளையாடுவதே, மீன்வளத்துறை வாடிக்கையாக கொண்டு இருப்பதை பாரதிய மீனவ கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story