நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் பட்னாவிசுக்கு எம்.எல்.ஏ. கடிதம்
தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா கடிதம் எழுதியிருக்கிறார்
மும்பை,
தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா கடிதம் எழுதியிருக்கிறார்.
பத்மாவதிஇயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’. வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், நடிகர்கள் ரண்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 1–ந் தேதி திரைக்கு வருகிறது.
பத்மாவதி படத்தில் வரலாற்றை தவறாத சித்தரித்து இருப்பதாகவும், இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க கோரியும் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜ் புரோகித், திரைப்பட தணிக்கை குழுவுக்கும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி ஸ்மிருதி இரானி ஆகியோருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
பட்னாவிசுக்கு கடிதம்இந்த நிலையில், பத்மாவதி படத்தில் இந்தியாவின் கலாசாரத்தை தவறான வழியில் சித்தரித்து இருப்பதாகவும், இதுபோல் படம் எடுக்க யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் கூறி பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில், அவர் கூறி இருப்பதாவது:–
பத்மாவதி படம் இந்துக்களின் உணர்வை காயப்படுத்துவதோடு, மராட்டியத்தின் சமூக நல்லிணக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தலாம். ஆகையால், அந்த படத்துக்கு தடை விதிக்கும்பட்சத்தில், ‘திரைப்படம் இயக்குகிறேன்’ என்ற பெயரில் வரலாற்றை தவறாக சித்தரிப்பவர்களுக்கும், நாட்டின் கலாசாரத்துக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கும் வலுவான செய்தி சென்றடையும்.
இந்த படத்துக்கு பின்னால் வெறும் வணிக நோக்கத்தை மட்டுமே இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கொண்டிருக்கிறார். எனவே, இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும். வரலாற்றுடன் விளையாட யாருக்கும் அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் அவர் கூறியிருக்கிறார்.