தம்பியை எரித்து கொன்ற வழக்கில் அண்ணனின் கள்ளக்காதலி கைது
சிவகங்கையில் தம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வழக்கில், கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக அண்ணனின் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை காந்திவீதி, சந்தன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன்கள் கண்ணன்(வயது 35), முருகன்(30). கண்ணன் சிவகங்கையில் உள்ள காய்கறி சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி முருகன், ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அண்ணன்–தம்பி இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23–ந்தேதி கண்ணன், முருகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் அன்று இரவு முருகன் வீட்டினுள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மீது கண்ணன் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த முருகன், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் தனது தம்பியை எரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
ஆனால் முன்னதாக சாகும் தருவாயில் முருகன் கொடுத்த மரண வாக்குமூலத்தில், தன்னுடைய அண்ணன் கண்ணனுக்கும், வெள்ளையம்மாள் என்ற பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், அவருடைய தூண்டுதலின்பேரில் தன் மீது கண்ணன் பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாகவும் சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வெள்ளையம்மாளின் தூண்டுதலின்பேரிலேயே கண்ணன், அவரது தம்பியை கொலை செய்தது தெரியவந்தது. இந்தநிலையில் வெள்ளையம்மாளை போலீசார் கைது செய்தனர்.