கோவையை தொடர்ந்து வஞ்சிக்கும் ரெயில்வே நிர்வாகம் பயணிகள் குற்றச்சாட்டு
திருச்செந்தூர், சென்னை ரெயில்கள் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் கோவையை ரெயில்வே நிர்வாகம் தொடந்து வஞ்சித்து வருகிறது என்று பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோவை,
கோவை– போத்தனூர்– பொள்ளாச்சி இடையேயான அகல ரெயில் பாதை 7 ஆண்டுகளாக நடந்த கடும் போராட்டத்துக்கு பிறகு புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் ரெயில் பாதை அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு ஒரே ஒரு ரெயில் மட்டும் தற்போது கோவை– போத்தனூர்– பொள்ளாச்சி மார்க்கத்தில் விடப்பட்டுள்ளது. அதுவும் ரெயில் மதிய நேரத்தில் விடப்படுவதால் அதில் ஒரு சில பயணிகள் மட்டுமே பயணம் செய்கிறார்கள். இதனால் அந்த பாசஞ்சர் ரெயில் தினமும் ரூ.1 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்ட போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்கள் விடக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையை குடைந்து ரெயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இரண்டுபுறமும் பாறைகள் உருண்டு ரெயில்பாதையில் விழும் என காரணம் காட்டி கூடுதல் ரெயில்கள் இயக்கவில்லை என ரெயில்வே நிர்வாகம் கூறியது.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி புதிய ரெயில் அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இரண்டு ரெயில்கள் கேரள மாநிலம் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் கோகிலன் மற்றும் பயணிகள் சிலர் கூறியதாவது:–
திருச்செந்தூரில் இருந்து பழனி வரை தினமும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த பாசஞ்சர் ரெயில் தற்போது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 1–ந் தேதி வெளியிடப்பட்ட புதிய ரெயில்வே அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில் பாலக்காடு வரை திட்டமிட்டே நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ரெயிலை பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை நீட்டித்திருந்தால் கோவையில் உள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஒரு ரெயில் கிடைத்திருக்கும். ஆனால் அந்த ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது கோவையை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
இதேபோல் சென்னையில் இருந்து சேலம்–நாமக்கல்–கரூர்–திண்டுக்கல் வழியாக பழனி வரை இயக்கப்பட்டு வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1–ந் தேதி முதல் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாலக்காட்டில் உள்ளவர்கள் சென்னை செல்வதற்கு மேலும் ஒரு ரெயில் கிடைத்துள்ளது. பழனி வரை இயக்கப்பட்டு வந்த அந்த ரெயிலை பொள்ளாச்சி வழியாக கோவைக்கு நீட்டிப்பதற்கு பதில் பாலக்காடுக்கு ரெயில்வே நிர்வாகம் திருப்பி விட்டது கோவை மக்களின் நலனை புறந்தள்ளும் செயலாகும்.
மேலும் மதுரையில் இருந்து தினமும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 10.40–க்கும், பொள்ளாச்சிக்கு பகல் 12.25–க்கு வந்து விட்டு மீண்டும் பிற்பகல் 3.15 மணிக்கு மீண்டும் பழனி வழியாக அந்த ரெயில் மதுரை சென்று வந்தது. ஆனால் அந்த ரெயிலை தற்போது பழனி வரை நிறுத்தி விட்டார்கள். இந்த மாறுதல் கடந்த 1–ந் தேதி வெளியிடப்பட்ட ரெயில்வே அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த ரெயிலை கோவை வரை நீட்டித்தால் கோவையில் உள்ளவர்கள் மதுரைக்கு செல்வதற்கு தினமும் ஒரு ரெயில் கிடைக்கும்.
ஏற்கனவே கோவை–போத்தனூர்–பொள்ளாச்சி மார்க்கத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை என்று கோவை மக்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் பொள்ளாச்சி வரை இயக்கப்பட்ட ரெயிலை பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது கோவை பயணிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே ரெயில்வே நிர்வாகம் புதிதாக அமைக்கப்பட்ட கோவை–போத்தனூர்–பொள்ளாச்சி மார்க்கத்தில் புதிய ரெயில்களை விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.