மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் தாசில்தார் கண்முன்னே டிரைவர் மீது தாக்குதல்


மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் தாசில்தார் கண்முன்னே டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:30 AM IST (Updated: 12 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் கண்முன்னேலாரி டிரைவரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் பகுதி காவிரி ஆற்றில் மணல் அள்ள மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இந்த நிலையில் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் திருட்டு தனமாக மணலை அள்ளி அதனை ஒரு இடத்தில் குவித்து வைத்து பின்பு லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் மண்மங்கலம் பகுதியில் இதுபோன்று திருட்டுத்தனமாக அள்ளப்பட்ட மணலை ஒரு இடத்தில் குவித்து வைத்து லாரிகளில் ஏற்றி சென்று விற்கப்படுவதாகவும், இந்த மணல் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மண்மங்கலம் அருகே பெரிய வடுகப்பட்டியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதன் பின்னால் வந்த மற்ற மணல் லாரிகளும் சிறைபிடிக்கப்பட்டன. மொத்தம் 8 மணல் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மண்மங்கலம் தாசில்தார் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் காலை 7.15 மணி அளவில் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணல் லாரி டிரைவர் ஒருவருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தாசில்தார் முன்னிலையில் லாரி டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தாசில்தார் எடுத்துக்கூறியும் கேட்காமல் டிரைவரை சூழ்ந்துகொண்டு பொதுமக்கள் பயங்கரமாக தாக்கினர்.

ஒரு கட்டத்தில் தாக்குதல் தாங்க முடியாமல் டிரைவர் தப்பியோட முயன்றார். இருந்தாலும் விரட்டி சென்று தாக்கினர். என்னை ஏன் அடிக்கிறீர்கள் என டிரைவர் கேள்வி எழுப்பியபடியே சட்டையை கிழித்துக்கொண்டு நன்றாக அடித்து என்னை கொன்றுவிடுங்கள் என ஆவேசமாக கத்தினார். அப்போது தாசில்தார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். அதன்பின் பொதுமக்கள்தாக்குதலை நிறுத்தினர்.

பின்னர் சிறைபிடிக்கப்பட்ட 8 லாரிகளையும் தாசில்தார் பறிமுதல் செய்தார். தொடர்ந்து லாரிகள் அனைத்தும் மண்மங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல நெரூர் அருகே சீத்தகாட்டுபுதூர் பகுதியில் மணல் அள்ளி வந்த 6 லாரிகளை நேற்று காலை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கரூர் உதவி கலெக்டர் சரவணமூர்த்தி விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். மேலும் 6 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டம் நடந்த இடங்களுக்கு வாங்கல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கரூரில் நேற்று 2 இடங்களில் மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதும், லாரி டிரைவர் தாக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story