கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் பகுதியில் 2–வது நாளாக மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் பகுதியில் 2–வது நாளாக மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் பகுதியில் 2–வது நாளாக மீனவர்கள், மீன்பிடிக்க செல்லவில்லை.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றியுள்ள அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, எக்கியார்குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் கடல் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று முன்தினம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் போன்றவற்றை கடற்கரையோரத்தில் இருந்து எடுத்து பாதுகாப்பாக மேடான இடத்திற்கு மீனவர்கள் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்றும் மரக்காணம் பகுதியில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாகவும், பயங்கர சூறாவளி காற்று வீசுவதாலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் நேற்றும் 2–வது நாளாக மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அப்பகுதி ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.


Next Story