அவினாசியில் பனியன் நிறுவன காசாளரின் சாவில் மர்மம்: பிணம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


அவினாசியில் பனியன் நிறுவன காசாளரின் சாவில் மர்மம்: பிணம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 11:15 PM GMT (Updated: 11 Nov 2017 8:12 PM GMT)

அவினாசியில் பனியன் நிறுவன காசாளரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து நேற்று அவரது பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவினாசி,

அவினாசி கைகாட்டியில் புதூர் கமிட்டியார் காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 50), இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பல ஆண்டுகள் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கஸ்தூரி(45) என்ற மனைவியும், தினேஷ்குமார் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த 12.6.2017 அன்று தன் வீட்டில் படுக்கையில் சுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் 13.6.2017 அன்று அவினாசி மயானத்தில் புதைக்கப்பட்டது.

பின்னர் சில நாட்கள் கழித்து கஸ்தூரியை சந்தித்த 2 பெண்கள் இறந்து போன சுந்தர்ராஜன் தங்களுக்கு பல லட்சம் பணம் தரவேண்டும் என்று கஸ்தூரியிடம் பணம் கேட்டுள்ளனர். இதனால் இந்த பெண்களின் தொந்தரவால் சுந்தர்ராஜன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கஸ்தூரி எண்ணியுள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவினாசி போலீசார் எந்த விசாரணையும் நடத்த வில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து அவினாசி ஜே.எம்.கோர்ட்டில் தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் சப்–கலெக்டர் ‌ஷரவன்குமார் அவினாசி தாசில்தார் விவேகானந்தன், அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி மற்றும் கஸ்தூரி ஆகியோர் முன்னிலையில் நேற்று சுந்தர்ராஜன் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு கோவை தடயவியல் மருத்துவக்குழுவின் டாக்டர்கள் ஜெய்சிங், குழந்தைவேல், கணபதி ஆகியோர் சுந்தர்ராஜனின் உடல் உடற்கூறுகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட சுந்தர்ராஜன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story