திருப்பூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; பயணிகள் ரெயில் தப்பியது
திருப்பூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. என்ஜின் டிரைவர் இதை கண்டறிந்து மெதுவாக இயக்கியதால் பயணிகள் ரெயில் தப்பியது.
திருப்பூர்,
ஈரோட்டில் இருந்து பாலக்காட்டுக்கு பயணிகள் ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 9.35 மணிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் வந்தது. இதை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை மெதுவாக இயக்கி சிறிது தூரத்தில் நிறுத்தினார். தண்டவாளத்தில் ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை என்ஜின் டிரைவர் கண்டறிந்தார்.
உடனடியாக அவர் இதுகுறித்து திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். போத்தனூரில் இருந்து ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் பயணிகள் ரெயில் அங்கிருந்து சுமார் ½ மணி நேரம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. தண்டவாள விரிசலை என்ஜின் டிரைவர் கண்டறிந்து சாமர்த்தியமாக இயக்கியதால் பயணிகள் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.
பின்னர் திருப்பூரில் இருந்து கோவை மார்க்கமாக சென்ற ரெயில்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்ட தண்டவாள பகுதியில் வழக்கமான வேகத்தை குறைத்து 20 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் ரெயில்கள் தாமதம் இல்லாமல் சென்றன. அதே நேரத்தில் கோவையில் இருந்து திருப்பூர் மார்க்கமாக வரும் ரெயில்கள் அருகில் உள்ள மற்றொரு தண்டவாளம் வழியாக வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ரெயில்வே பொறியாளர்கள் குழுவினர் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை வெட்டி அகற்றி மாற்று தண்டவாளம் பொருத்தி, மாலையில் சரி செய்தனர். குளிர்காலம் தொடங்கி விட்டதால் தண்டவாளத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படும் என்றும் ஊழியர்கள் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும் ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.