ஆந்திராவில் இருந்து காரில் கடத்தல்: திருச்சியில் ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து காரில் கடத்தல்: திருச்சியில் ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை திருச்சியில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி சமயபுரம் டோல் பிளாசா பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் தெய்வராணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தினர். காரில் 2 பேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த காரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் 4 பெரிய பண்டல்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, ரூ.15 லட்சம் மதிப்புள்ள 121 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக காரில் இருந்த மதுரையை சேர்ந்த வினோபரமன்(வயது 38), சென்னை சிட்டிலபாக்கத்தை சேர்ந்த சத்தியராஜ்(31) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story