சிவகங்கையில் காமராஜர் முழுஉருவ சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும்
சிவகங்கையில் காமராஜர் முழு உருவ வெங்கல சிலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்– அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சண்முகராஜன் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:–
சிவகங்கை நகரில் கடந்த 1976– ம் ஆண்டு காமராஜர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 1986–ம் ஆண்டு காமராஜரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை சேதம் அடைந்ததால் அதை மாற்றி காமராஜரின் முழு உருவ வெங்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முழுஉருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த சிலை திறக்கப்படாமல் துணி போட்டு மூடிவைக்கபட்டு உள்ளது. இந்த சிலை ஏற்கனவே சிலை இருந்த இடத்தில் மார்பளவு சிலைக்கு பதிலாக அமைக்கப்பட்டது.
இதை திறக்க சிவகங்கை நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. தற்போது இந்த சிலை முதல்– அமைச்சரின் அனுமதிக்கு காத்திருக்கிறது. எனவே சிவகங்கைக்கு வருகிற 18–ந் தேதி வருகை தரும் தாங்கள் காமராஜரின் சிலையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.