கோவை கணபதியில் சொத்துக்காக அண்ணன் மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்


கோவை கணபதியில் சொத்துக்காக அண்ணன் மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்
x
தினத்தந்தி 12 Nov 2017 10:30 PM GMT (Updated: 2017-11-13T01:38:40+05:30)

சொத்துக்காக மூதாட்டியை மகளும், மருமகளும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொன்றது 2 ஆண்டுகளுக்கு பின்னர் துப்புத்துலங்கியது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை கணபதி மாநகர், வ.உ.சி. காலனியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 66). அவருடைய மகன்கள் சுரேஷ், கோபால், மகள் புவனேஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் இறந்துவிட்டார். மற்றொரு மகன் கோபால் தனது மனைவி கவுரியுடன் உடையாம்பாளையத்தில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி தன்னுடைய கணவர் ஜாக்சனுடன் கணபதியில் வசித்து வருகிறார். ராஜாமணிக்கு சொந்த வீடுகள் மூலம் மாதவாடகை வருமானமாக வந்தது. அவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த கடந்த 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13–ந்தேதி ராஜாமணி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். உடலில் காயங்கள் இல்லை. சரவணம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சாதாரண மரணம் என்று கருதி வழக்கை முடித்து வைத்தனர்.

இந்தநிலையில் புவனேஸ்வரி கணபதி பகுதியை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகினார். இருவரும் தனிமையில் இருக்கும்போது, தனது தாய் சாதாரணமாக இறக்கவில்லை என்றும், அவரை தானும், உறவுக்கார பெண்ணும் சேர்ந்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் புவனேசுவரி, அந்த ஆண் நண்பரிடம் பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார். பணம் கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் பிரச்சினையை ஏற்படுத்திவிடப்போவதாக புவனேஸ்வரி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து புவனேஸ்வரி குறித்தும், அவர் தாயை கொலை செய்தது குறித்த தகவலையும் கூறினார்.

இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாய் ராஜாமணியை, தன்னுடைய அண்ணனின் மனைவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

ராஜாமணி, தனது சொந்த வீடுகளில் இருந்து வசூலாகும் வாடகை பணத்தை மகளுக்கோ, மகனுக்கோ, உறவினர்களுக்கோ கொடுக்காமல், தான் நெருங்கி பழகிய ஒருவருக்கு கொடுத்து வந்துள்ளார். இதனால் அவரது பெயரில் உள்ள வீடுகளையும் தங்களுக்கு எழுதி தராமல் வேறு நபருக்கு எழுதி வைத்து விடக்கூடும் என்று கருதிய புவனேஸ்வரியும், அண்ணனின் மனைவி கவுரியும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று ராஜாமணி அயர்ந்து தூங்கிகொண்டு இருந்தபோது, புவனேஸ்வரியும், கவுரியும் சேர்ந்து தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்று விட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளனர். இந்த கொலை சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சரவணம்பட்டி போலீசார் ராஜாமணி இறந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி, புவனேஸ்வரியையும், கவுரியையும் பிடித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சொத்துக்களை அடைவதற்காக தாயை, அண்ணன் மனைவியுடன் சேர்ந்து மகளே தீர்த்துக்கட்டியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story