பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நகைக்கடை மூலம் கோடிக்கணக்கில் ரூபாய் மாற்றப்பட்டதா? புதுச்சேரியில் நடந்த சோதனையில் பரபரப்பு தகவல்


பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நகைக்கடை மூலம் கோடிக்கணக்கில் ரூபாய் மாற்றப்பட்டதா? புதுச்சேரியில் நடந்த சோதனையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2017 5:45 AM IST (Updated: 13 Nov 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதுச்சேரி நகைக்கடையின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மாற்றப்பட்டதா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

புதுச்சேரி,

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அதன் அருகிலேயே வெளிநாட்டு பணம் மாற்றும் (மணி எக்சேஞ்ச்) அலுவலகமும் இந்த நிறுவனத்தால் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 9–ந் தேதி காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகளுக்கு வந்தனர். அவர்கள் 3 பிரிவுகளாக பிரிந்து தங்கம், வெள்ளி நகைக்கடைகள் மற்றும் வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகள், பணம் மாற்றும் அலுவலகம் மற்றும் மஞ்சக்குப்பம் நட்சத்திர ஓட்டலில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்காக 50–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதுவைக்கு வந்து இருந்தனர். பல குழுக்களாக பிரிந்து அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினமும் 3–வது நாளாக சோதனை நீடித்தது. விடிய விடிய நடந்த இந்த சோதனை நேற்று 4–வது நாளாக நீடித்தது. ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி தங்க நகைக்கடையில் நேற்று மாலை 5.30 மணியுடன் சோதனை முடிவடைந்தது. அங்கிருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் மற்றும் தஸ்தாவேஜுகளை எடுத்துச் சென்றனர். அதன்பின் தங்க நகைக்கடை மட்டும் திறக்கப்பட்டது. வெள்ளி நகைக்கடை மற்றும் வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நீடித்து வந்தது. மாலை 6 மணியுடன் இங்கு நடத்தப்பட்ட சோதனையும் முடிவடைந்தது.

சசிகலா, தினகரன் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகளில் சோதனை நடத்தியது ஏன்? என்பது குறித்து விசாரித்ததில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா தரப்பினருக்கு பல கோடி ரூபாய்க்கு பணத்தை மாற்றிக் கொடுத்து உதவி இருப்பதாகவும் இதன் எதிரொலியாகத் தான் வருமானவரி அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.


Next Story