எமரால்டு பகுதியில் உள்ள 36 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
எமரால்டு பகுதியில் உள்ள 36 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பஞ்சமி நிலம் மீட்பு கூட்டுக்குழு தலைவர் எமரால்டு சேகர் மற்றும் அதன் உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறிஇருப்பதாவது:–
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, பஞ்சமி நிலங்களை மீட்க தமிழக வருவாய் நில நிர்வாக ஆணையர் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மாநிலம் முழுவதும் பஞ்சமி நிலங்கள் எத்தனை ஏக்கரில் உள்ளது? என்பதை கணக்கெடுத்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக கோர்ட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு பகுதியில் 36 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சிலர் கையகப்படுத்தி, வேறு சிலருக்கு விற்பனை செய்தும், போக்கியத்திற்கு கொடுத்தும் உள்ளனர். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பெற்று உள்ளனர். மேற்கண்ட நிலம் இருக்கும் பகுதியான எமரால்டு மின் வாரிய பொறியாளர்களுக்கு மனுக்கள் கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த நிலங்களை கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு செய்து மீட்க வேண்டும்.
மேலும் அந்த பஞ்சமி நிலத்தை மீட்டு அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்க வேண்டும். எமரால்டு பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை தவறாக பயன்படுத்தி, ரூ.6 லட்சம் கடன் வழங்குவதாகவும், நிலம் வழங்குவதாகவும் கூறி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலித்து பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.