காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால், காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் வழுக்குபாறை பாலு, பொதுச் செயலாளர் கந்தசாமி மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக தடாகம், தொண்டாமுத்தூர், பேரூர், எட்டிமடை, மாவுத்தம்பதி உள்பட பல்வேறு கிராமங்களில் தினமும் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள், உடனடியாக வருவது இல்லை. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்துக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்ததும், அவற்றை உடனடியாக வனப்பகுதிக்குள் துரத்துவதற்காக தனிக்குழு அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், ‘கோவை மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்கக்கல்வி அலுவலக வளாகத்தில் பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் துருப்பிடித்து காணப்படுகின்றன. அதற்குள் மழைநீரும் தேங்கி நிற்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது.

பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் அசோக்குமார் மற்றும் டெம்போ டிரைவர்கள் கொடுத்த மனுவில், ‘கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே பா.ஜனதா தொழிலாளர்களின் டெம்போ நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தில் திடீரென்று கடையை வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து அனுமதியில்லாமல் போடப் பட்டுள்ள அந்த கடையை அகற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை வெரைட்டிஹால் ரோடு சி.எம்.சி. காலனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த அடுக்குமாடி கட்டிடம் பழுதாகி உள்ளதால், அங்கு இருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சில துப்புரவு தொழிலாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘சரியான ஆவணங்கள் இருக்கும் பலருக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே ஆவணங்கள் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஏழூர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஏழூர் பிரிவு அருகே சுங்கச்சாவடி அமைக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இங்கு சுங்கச்சாவடி அமைத்தால், ஏராளமான வீடுகள் இடிக்கப்பட வேண்டும். எனவே சுங்கச்சாவடியை குடியிருப்பு இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

சோமனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி வர்க்கீஸ் என்பவர் சக்கர நாற்காலியில் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார்.பின்னர் அவர் கலெக்டரிசம் மனு கொடுத்தார்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

 நான் கூலி வேலை செய்து வந்தேன். எனக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால் ஊனமாகிவிட்டது. கடந்த 4 மாதத்துக்கு முன்பு விபத்தில் சிக்கிய எனது மனைவிக்கும் கால் முறிந்துவிட்டது. நாங்கள் இருவரும் வேலைக்கு செல்ல முடியாததால் எங்களின் மகளை படிக்க வைக்க முடியவில்லை. இதன் காரணமாக எங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. எனவே எங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லை என்றால் எங்களை கருணை கொலை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறி உள்ளார்.


Next Story