திருப்பூர்–அவினாசி இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் சாலை மறியல்


திருப்பூர்–அவினாசி இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2017 10:30 PM GMT (Updated: 2017-11-14T00:51:28+05:30)

திருப்பூர்–அவினாசி இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் உள்ள சாலைகளில் அவினாசி ரோடு மிகவும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அவினாசி ரோட்டில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினமும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ரோட்டில்தான் சென்று வருகிறார்கள்.

ஆனால் கடந்த பல மாதங்களாக இந்த சாலை ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக திருப்பூர் புஷ்பா சந்திப்பு முதல் தண்ணீர்பந்தல் வரை பல்வேறு இடங்களில் சாலையின் மையப்பகுதியில் மிகப்பெரிய குழிகளும், பள்ளங்களும் உள்ளன. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இதுவரை அவினாசி சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலையை தோண்டுவதாலும், தொலைபேசி வயர் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்படுவதாலும் சாலை சீரமைக்கப்படவில்லை என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சேதமடைந்து நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ள அவினாசி சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா. சார்பில் சாலை செப்பனிடும் போராட்டம் நடைபெறும் என்றும், சாலையில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் த.மா.கா. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கடந்த வாரம் நடைபெற்ற த.மா.கா. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு திருப்பூர் குமார் நகர் சந்திப்பில் த.மா.கா. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் குமார்நகர் சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டன. அத்துடன் அந்த இடத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது. இதையடுத்து த.மா.கா. மறியல் போராட்டம் குமார் நகரை அடுத்த எஸ்.ஏ.பி. சந்திப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக நேற்று காலை 8 மணி முதலே மாநகர போலீஸ் வடக்கு உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு ஆகியோர் தலைமையில் பெண் போலீசார் உள்பட 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் உள்பட 300–க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் கொடிகளுடன் அங்கு குவிந்தனர். இதில் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர், மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் அவினாசி சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்ட த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:–

சேதமடைந்த அவினாசி சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், குப்பை, சாக்கடை உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது. திருப்பூர் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். த.மா.கா. சார்பில் மறியல்போராட்டம் அறிவித்த உடன் குமார் நகர் பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இது த.மா.கா. கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அவர்கூறினார்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 66 பெண்கள் உள்பட 316 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு குமார் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story