போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் நடத்துனர்கள் மனு
பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் நடத்துனர்கள் மனு கொடுத்தனர்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் காங்கேயம் கிளை நடத்துனர் பொன்னர் தலைமையில் நடத்துனர்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் (பொன்னர்) காங்கேயம் கிளையில் கடந்த 10 வருடங்களாக நடத்துனராக பணிபுரிந்து வருகிறேன். போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் சுமார் 65 பேருக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த ஜூலை மாதம் நாங்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இதன்பின்னர் பொதுமேலாளர் உத்தரவுப்படி போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்பட்ட அதிகாரி, எனக்கு செப்டம்பர் 22–ந் தேதி பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
எனது குடும்ப சூழல் காரணமாக பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி நிர்வாக இயக்குனர் பாண்டியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், ஏற்கனவே பணியிட மாற்றம் உத்தரவு பெற்றவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்ததால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உத்தரவை ரத்து செய்வேன் இல்லை என்றால் பணியை விட்டு நீக்கிவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். எனவே, தொழிலாளர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணியிடமாற்றத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
திருப்பூர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் குன்னத்தூர் வெள்ளிரவெளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். விசைத்தறி தொழில் செய்து வருகிறேன். கடந்த 2014–ம் ஆண்டு தொழிலை மேம்படுத்துவதற்காக ஊத்துக்குளி வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் என்னுடைய வீட்டை ரூ.9 லட்சத்துக்கு விலை பேசி, கிரயத்தின் போது ரூ.5 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி தொகையை படிப்படியாக கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால் தற்போது அவரிடம் பணம் கேட்ட போது, ரூ.10 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்றும், மேலும், வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மக்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை சுகாதாரமின்றி சீர்கேடாக காணப்படுகிறது. மேலும் புதிய பஸ் நிலையதில் பொது சுகாதார கழிவறை இல்லாத காரணத்தினால், திறந்த வெளியையே பொதுமக்கள் கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட 22–வது வார்டு பவானிநகர் 5–வது வீதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கழிவறை 5 வருடங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் நலன் கருதி இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய விளம்பர பலகைகளை ரோட்டை ஆக்கிரமிக்கும் விதமாக வைத்துள்ளனர். எனவே ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.