பல்லடம் அருகே பனியன் நிறுவன உரிமையாளரின் தந்தை கழுத்தை நெரித்துக்கொலை


பல்லடம் அருகே பனியன் நிறுவன உரிமையாளரின் தந்தை கழுத்தை நெரித்துக்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பனியன் நிறுவன உரிமையாளரின் தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் திருமலை நகரைச்சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65). இவருடைய மகன் இளங்கோவன்(37). இவர் பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் புதூரில் பெரியசாலை தோட்டத்தில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த பனியன் நிறுவனத்தில் தினசரி இரவு நேரத்தில் பாதுகாப்புக்காக இளங்கோவனின் தந்தை முத்துசாமி சென்று படுத்துக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்திற்கு விடுமுறை என்பதால் வேலை நடைபெறவில்லை. இதனால் அன்று இரவு முத்துசாமி பனியன் நிறுவனத்திற்கு போய் படுக்க சென்றுள்ளார்.

நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். அப்போது பனியன் நிறுவனத்தின் உள்ளே முத்துசாமி மர்ம ஆசாமிகளால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

மேலும் பனியன் நிறுவனத்தில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசாருக்கு அவரது மகன் இளங்கோவன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி மற்றும் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் அங்கும் இங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையாளிகளின் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட முத்துசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகள் பனியன் துணிகளை கொள்ளை அடிப்பதற்காக முதியவர் முத்துசாமியை கழுத்தை நெரித்துக்கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் முதலில் பனியன் நிறுவனத்திற்குள் நுழைந்து பனியன் துணிகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது முத்துசாமி அவர்களை எதிர்த்து போராடியுள்ளார். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த பனியன் துணியை எடுத்து முத்துசாமியின் முகம், கழுத்தில் போட்டு மூடி கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளனர்.


Next Story