பயிர் இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல் செய்த விவசாயிகள் சங்கத்தினர் 54 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
கடந்த 2016–17–ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு திட்டத்தில் ராமநாதபுரம் தாலுகாவில் பதிவு செய்து விடுபட்ட தேர்போகி, கழுகூருணி, குயவன்குடி, குமரியேந்தல் வருவாய் கிராம விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும். தாலுகா முழுவதும் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விவசாயிகளை ஏமாற்றும் தனியார் இன்சூரன்சு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது.
அரசு வழங்கிய வறட்சி நிவாரண தொகை, பயிர் இழப்பீட்டு தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மயில்வாகனன், தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் முத்துராமு உள்பட விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையில் கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் 12 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர்.