சினிமாவுக்கு முன்னோடியாக விளங்கிய நாடக கலையை அழிய விடக்கூடாது நடிகர் நாசர் பேச்சு
சினிமாவுக்கு முன்னோடியாக விளங்கிய நாடக கலையை அழிய விடக்கூடாது என சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுநாள் நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கூறினார்.
புதுச்சேரி,
அரசின் கலை பண்பாட்டுத்துறை, கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் மாநில திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் நேற்று சங்கரதாஸ் சுவாமிகளின் 95–வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை காந்தி வீதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி யது. இதில் திரைப்பட துறையினர் கலந்து கொண்டனர். அப்போது நாடகம், தெருக்கூத்து, தமிழ் இசை வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் ஆடிப்பாடி வந்தனர். ஊர்வலத்தின் முன் சங்கரதாஸ் சுவாமிகளின் படம் அலங்கரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது.
கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு அமைச்சர் ஷாஜகான், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உள்பட திரையுலக பிரமுகர்கள், புதுவை முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:–
தெருக்கூத்து என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. நாடகம் 175 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. ஆனால் சினிமா தோன்றி 100 ஆண்டுகள்தான் ஆகிறது. பழமையை நாம் மறந்துவிடக்கூடாது.
சினிமாவுக்கு முன்னோடியாக விளங்கிய நாடக கலையை அழியவிடக்கூடாது. நாடகத்தால்தான் சினிமா உருவானது. ஆரம்ப காலத்தில் நாடக கலைஞர்கள்தான் சினிமாவில் நடித்தனர். நாடகம் உருவாகாமல் இருந்து இருந்தால் சினிமா 50 ஆண்டுகள் பின்னோக்கி இருந்திருக்கும். நாடக கலையை காப்பாற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கம் விரும்பி செயல்படுகிறது.
சிறு குழந்தைகள் வயதுக்கு மீறி திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
இவ்வாறு நடிகர் நாசர் பேசினார்.