உடலில் கல்லை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை


உடலில் கல்லை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து பெண் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2017 10:15 PM GMT (Updated: 13 Nov 2017 9:08 PM GMT)

ஊத்தங்கரை அருகே, குடும்ப தகராறில் உடலில் கல்லை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை,

ஊத்தங்கரை அருகே உள்ள அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம், தொழிலாளி. இவருடைய மனைவி உண்ணாமலை (வயது 60). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 9-ந்தேதியும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவரிடம் கோபித்து சென்ற உண்ணாமலை மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சிவலிங்கம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் உண்ணாமலையை காணவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மல்லம்பட்டியில் உள்ள ஏரியில் ஒரு பெண் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலர் திருஞானத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிவலிங்கம் மனைவி உண்ணாமலை என்பதும், குடும்ப தகராறில் உடலில் கல்லை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story