வெடிமருந்து தொழிற்சாலையின் லாரி டிரைவரை தாக்கியதாக 7 பேர் கைது; கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு


வெடிமருந்து தொழிற்சாலையின் லாரி டிரைவரை தாக்கியதாக 7 பேர் கைது; கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Nov 2017 11:00 PM GMT (Updated: 13 Nov 2017 9:14 PM GMT)

டி.முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற்சாலைக்கு செங்கல் ஏற்றி வந்த லாரி டிரைவரை தாக்கிய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா டி.முருங்கப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த வெற்றிவேல் வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மண்ணோடு மண்ணாக கலந்து விட்டதால் அவர்களது உடல்கள் கூட கிடைக்கவில்லை.

இந்த விபத்து பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி விபத்துக்கு காரணமான ஆலை அதிகாரிகளை கைது செய்தனர். ஆனால் அந்த ஆலையின் உரிமையாளர் இதுவரை கைது செய்யப்படவில்லை. விபத்துக்கு பின்னர் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது.

இதற்கிடையில் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் எனக்கோரி அங்கு வேலை பார்த்தவர்களின் குடும்பத்தினர் உள்பட சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். ஆனால் டி.முருங்கப்பட்டி கிராம மக்கள் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இந்த ஆலையால் தங்கள் கிராமத்தின் நிலத்தடி நீராதாரம் கெட்டுப்போய், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே வெடிமருந்து தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது எனக்கோரி அவர்கள் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம், எருமபாளையம் கிராமத்தில் உள்ள வெற்றிவேல் வெடிமருந்து நிறுவனத்திற்கு சொந்தமான மெக்கானிக் பட்டறையில் மெக்கானிக் மற்றும் டிரைவராக வேலைபார்த்து வரும் அப்பகுதியை சேர்ந்த முருகன்(வயது 38), கடந்த 4-ந் தேதி இரவு 11.30 மணிக்கு அந்த நிறுவனத்திற்கு சொந்தமான லாரியில் சேலத்தில் இருந்து டி.முருங்கப்பட்டியில் உள்ள வெற்றிவேல் வெடிமருந்து தொழிற்சாலைக்கு செங்கல் ஏற்றி வந்தார்.

தொழிற்சாலைக்கு செல்லும் சாலையில் லாரியை திருப்பியபோது டி.முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 பேர் லாரியை மறித்து டிரைவரின் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிரைவர் முருகன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்குமார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு டி.முருங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(54), பழனியப்பன்(58), நடராஜன்(56), புகழேந்திரன்(48), ஆனந்தன்(36), கந்தசாமி மகன் சரவணன்(35), அப்பாதுரை(48) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அண்ணாமலை மகன் சேகர், ராமசாமி மகன் ராஜேந்திரன், சின்னத்துரை மகன் பிரபாகரன் ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் விவசாய தொழிலாளர்கள்.

இதனை கண்டித்து டி.முருங்கப்பட்டியில் நேற்று காலை முதலே வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். இதனால் கடைகள் மூடப்பட்டிருந்தன. கிராம பகுதியில் கருப்பு கொடியை தோரணமாக கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டி.முருங்கப்பட்டி கிராமத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் கைது நடவடிக்கையால் டி.முருங்கப்பட்டி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Next Story