கோவில்பட்டி–எட்டயபுரம் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காத பிரச்சினை குறித்து விசாரணை
கோவில்பட்டி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காத பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி,
கோவில்பட்டி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காத பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் வெங்கடேஷ் உறுதி அளித்துள்ளார்.
போராட்டம் அறிவிப்புதூத்துக்குடி மாவட்டத்தில் 2015–16–ம் ஆண்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த பயிர்களுக்கு ரூ.29 கோடியே 42 லட்சம் காப்பீடு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடம்பூர், கயத்தார், கழுகுமலை, இளையரசனேந்தல், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட 9 பகுதிகளில் பயிரிடப்பட்ட உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் நூற்றாண்டு விழா நடைபெறும் நாளில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
பேச்சுவார்த்தைஇதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகளுடன் கலெக்டர் வெங்கடேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் ஜெயக்கண்ணன், மாநில அமைப்பாளர் காளிராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, பயிர் காப்பீடு தொகை கிடைக்காத பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும், விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
கருப்பு கொடிபின்னர் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களில் மிளகாய் பயிரில் ஊடுபயிராக பயிரிட்ட வெங்காயத்துக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பயிர் காப்பீட்டு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு பயிரிட்ட கடம்பூர், கயத்தார், கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட 9 பிர்க்காவை சேர்ந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
ஆகையால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்ததற்காக நிவாரணம் வழங்கப்பட்ட சான்றிதழை கலெக்டரிடம் கொடுத்து உள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார். வருகிற 20–ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 9 பிர்க்காவை சேர்ந்த விவசாயிகளை திரட்டி நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் முதல்–அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறினார்.