ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இந்திய கடலோர காவல்படை மீது தமிழக போலீசார் வழக்கு


ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: இந்திய கடலோர காவல்படை மீது தமிழக போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:45 AM IST (Updated: 15 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது தொடர்பாக இந்திய கடலோர காவல்படை மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாதா–77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு, அந்தோணிராஜ் என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் படகில் இருந்த பிச்சை, ஜான்சன் ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் படகில் இருந்த டிட்டோ, சாண்ட்ரோ, நிசாந்த், ஜாக்ஸன் ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர்.

தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மீன்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், கியூபிரிவு போலீசார், உளவுப் பிரிவு போலீசார் வருவாய்த்துறையினர் உள்பட போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட படகை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது படகு எவ்வித சேதமும் அடையவில்லை என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மீனவர் பிச்சை மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், சகாயம், எமரிட், சேசு உள்பட நிர்வாகிகள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘‘இதுவரை இலங்கை கடற்படையினரால் மட்டுமே மீனவர்கள் தொல்லைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்போது இந்திய கடலோர காவல் படையினரே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து, இன்று (புதன்கிழமை) மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது; நாளை (வியாழக்கிழமை) ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்த மீனவர்களை சந்தித்தனர். அவர்கள் கூறும்போது, ‘‘மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடலோர காவல்படையே இதுபோன்ற துப்பாக்கி சூட்டை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறினர்.


Next Story