ஜெருசலேமிற்கு புனித யாத்திரை அழைத்துச் செல்வதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி
ஜெருசலேமிற்கு புனித யாத்திரை அழைத்து செல்வதாக கூறி அம்பத்தூரில் ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர்,
வேலூரை அடுத்த காட்பாடி சிந்து கார்டன் பகுதியை சேர்ந்தவர் சாலமன் ராஜ்(வயது 46). இவர், இதே பகுதியில் ‘ரெயின்போ டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்‘ என்ற நிறுவனத்தின் மூலம் ஜெருசலேமிற்கு பயணிகளை அனுப்பி வருகிறார்.
இவரிடம் பெங்களூரு, சென்னை உட்பட பல நகரங்களை சேர்ந்த 15–க்கும் மேற்பட்டோர் ஜெருசலேம் செல்வதற்காக தலா ரூ.85 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். ஆனால் சொன்னபடி சாலமன் ராஜ் பயணிகளை புனிதயாத்திரைக்கு அழைத்து செல்லாமல் பல்வேறு காரணங்களை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இவரை நம்பி பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பணம் கட்டியர்களை பணம் கேட்க கூடாது நான் தரும்போது வாங்கி கொள்ளுங்கள் என மிரட்டலும் விடுத்தார்.
இதையடுத்து அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த ரமணி, ஆறுமுகம் ஆகியோர் தங்களை சாலமன்ராஜ் ஏமாற்றி விட்டதாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் 7 பேரும் இதேபோல் தங்களையும் சாலமன் ராஜ் ஏமாற்றி விட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தனர்.
அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சாலமன்ராஜ் ஏராளமானோரை ஜெருசலேம் அழைத்து செல்லுவதாக கூறி ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. அவர் இதுவரை ரூ.15 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதும், மேலும் தமிழ்நாடு முழுவதும் இவர் இதுபோல ஏமாற்றி இருக்கலாம் எனவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இதைத்தொடர்ந்து சாலமன்ராஜை அம்பத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.