கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 6 பேர் கைது


கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2017 4:45 AM IST (Updated: 15 Nov 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்ட கலெக்டர் உள்பட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து திடீரென்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமையில் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள் தமிழக கவர்னர் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி கோ‌ஷம் எழுப்பியதுடன், அரசு விருந்தினர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக செல்ல முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்கள் 6 பேரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இதில் அமைப்பு செயலாளர் ஆறுசாமி, மாவட்ட தலைவர் கோபால், செயலாளர் சாஜித், ஆனந்த், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவையில் அரசு உயர் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியது மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் ஆகும். புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடி செயல்படுவதுபோன்று நமது கவர்னர் செயல்பட தொடங்கி உள்ளார். இது,மத்திய அரசு படிப்படியாக தனது அதிகாரத்தின் கீழ் தமிழகத்தை கொண்டு வர நினைப்பது ஆகும்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று அண்ணா கூறினார். அவருடைய பெயரில் கட்சியை வைத்து இருப்பவர்கள் கவர்னர் ஆலோசனை நடத்தியதை எதிர்க்கவில்லை. கவர்னரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story