குடிபோதையில் தகராறு: மது பாட்டிலால் தாக்கியதில் கட்டிட தொழிலாளியின் காது அறுந்து விழுந்தது


குடிபோதையில் தகராறு: மது பாட்டிலால் தாக்கியதில் கட்டிட தொழிலாளியின் காது அறுந்து விழுந்தது
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளியின் காது அறுந்து விழுந்தது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி ராமர் விரிவாக்கம் வீதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோபி அருகே வாய்க்கால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் கடை அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு வாய்க்கால் ரோடு அண்ணா வீதியை சேர்ந்த கவின்பிரசாத் (24) என்பவர் குடிபோதையில் வந்து உள்ளார். அப்போது ஏன் ரோட்டில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி உள்ளாய்? என சந்திரகுமாரிடம், கவின்பிரசாத் கேட்டு உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

வாய்த்தகராறு முற்றியதில் கவின்பிரசாத் ஆத்திரம் அடைந்து மோட்டார்சைக்கிளை பிடித்து கீழே தள்ளியதுடன், அங்கிருந்த பாட்டிலை எடுத்து உடைத்து சந்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருடைய இடது காது துண்டாக அறுந்து விழுந்தது. காது அறுந்து விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அறுந்த காதுடன் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சந்திரகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து கவின்பிரசாத்தை கைது செய்தனர்.


Next Story