வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி நடத்துவது உரிய பலனை தராது; மாணிக்கம் தாகூர் பேட்டி


வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி நடத்துவது உரிய பலனை தராது; மாணிக்கம் தாகூர் பேட்டி
x
தினத்தந்தி 15 Nov 2017 4:00 AM IST (Updated: 15 Nov 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

வீடியோ கான்பரன்சிங் மூலம் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்களில் பயிற்சி அளிப்பது மாணவர்களுக்கு உரிய பலனை தராது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறும் முயற்சியினை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. தமிழக அரசு நீட் தேர்வு பிரச்சினையில் மாணவ, மாணவிகளை வஞ்சித்துவிட்டது. தமிழகம் முழவதும் 400–க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்டமாக 25 பயிற்சி மையங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்த பயிற்சி மையங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது உரிய பலனை தராது. இந்த வகையிலும் மாணவ, மாணவிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே உரிய பலனை தரும் வகையில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தொழில் முனைவேர் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறிப்பாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு எதிர்பார்த்த வரி சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் குடிசை தீப்பெட்டி தொழிலுக்கு 5 சதவீதம் வரி விதித்துள்ளது அவர்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். எனவே ஜி.எஸ்.டி. குழு தென்மாவட்ட தொழில்முனைவோர் கோரிக்கையினை பரிசீலிப்பதுடன் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கான வரியை குறைப்பதற்கும் முற்றிலுமாக விலக்கு அளிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடி கருணாநிதி சந்திப்பை வைத்து தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை ஏற்படுத்த நினைப்பவர்களின் கனவு பலிக்காது. மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்–அமைச்சராவது உறுதி. தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் முதல் முறையாக இதற்கான வடிவமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் நடத்தப்படுகிறது. கிராம அளவிலும் கட்சியின் செயல்பாட்டை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

முன்னதாக விருதுநகர் தேசபந்து திடலில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை யொட்டி அவரது உருவப்படத்துக்கு மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், நகர தலைவர் வெயிலுமுத்து மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story