தீக்குளிப்பு சம்பவம் குறித்த படம் வெளியீடு தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா ஐகோர்ட்டில் மனு


தீக்குளிப்பு சம்பவம் குறித்த படம் வெளியீடு தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோவூர் சத்யாநகரை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை,

சென்னை கோவூர் சத்யாநகரை சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த மாதம் 23–ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து, அவரது மனைவி, 2 மகள்கள் தீக்குளித்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அக்டோபர் 24–ந் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் தமிழக முதல்–அமைச்சர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அளித்த புகாரின் பேரில், என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000–ன்படி நெல்லை போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பேரில் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடந்த 5–ந் தேதி சென்னைக்கு வந்து என்னை கைது செய்தார். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதுபோல நான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே என் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story