தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12–ந் தேதி தீர்ப்பு


தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12–ந் தேதி தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Nov 2017 5:00 AM IST (Updated: 15 Nov 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் கோர்ட்டு அறிவித்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 22). பொறியியல் கல்லூரி மாணவரான இவர் பழனியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13–ந் தேதி சங்கரும், கவுசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகே சென்றபோது பட்டப்பகலில் கூலிப்படை கும்பலால் இருவரும் வெட்டப்பட்டனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கவுசல்யா தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடுமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீசன், பழனியை சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவரான பிரசன்னகுமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். கவுசல்யாவும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். இருதரப்பு விவாதங்கள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story