‘இடைத்தேர்தலில் கூட காங்கிரசை தோற்கடிக்க முடியவில்லை’ சிவசேனா விமர்சனம்


‘இடைத்தேர்தலில் கூட காங்கிரசை தோற்கடிக்க முடியவில்லை’ சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

சித்ரகூட் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் கூட காங்கிரசை பா.ஜனதாவால் தோற்கடிக்க முடியவில்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

பாரதீய ஜனதா ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டசபை தொகுதியில், கடந்த 9–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 12–ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் நிலான்சு சதுர்வேதி தன்னை எதிர்த்து களமிறங்கிய பா.ஜனதா வேட்பாளர் சங்கர் தயாள் திரிபாதியை 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால், பா.ஜனதாவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலையில், சித்ரகூட் இடைத்தேர்தலில் பா.ஜனதாவின் படுதோல்வியை மேற்கோள்காட்டி, அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–

முதலில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி கண்டது. அதன்பின்னர், மராட்டிய மாநிலம் நாந்தெட் மாநகராட்சி தேர்தலில், அக்கட்சி பெரிய இழப்பை சந்தித்தது. சித்ரகூட் பா.ஜனதாவின் மூன்றாவது தோல்வி. சித்ரகூட் உத்தர பிரதேச எல்லையில் அமைந்து இருப்பதால், அந்த மாநிலத்தின் துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மேலும், மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் இந்த இடைத்தேர்தலை கவுரவ போராக மாற்றிவிட்டார். ஆனாலும், பா.ஜனதா தோல்வியையே சந்தித்தது. பா.ஜனதாவின் இந்த இழப்பு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜனதா தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், காங்கிரஸ் அல்லாத நாட்டை உருவாக்க முடியவில்லை. சித்ரகூட் இடைத்தேர்தலில் கூட காங்கிரசை தோற்கடிக்க முடியவில்லை.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story