கந்துவட்டி புகாரில் விவசாயி கைது போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகை


கந்துவட்டி புகாரில் விவசாயி கைது போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே கந்து வட்டி புகாரில் விவசாயி கைது செய்யப்பட்டார். அவர் மீது பொய்யான புகார் கூறி இருப்பதாக தெரிவித்து கிராமமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடியைச் சேர்ந்தவர் மாதையன் (வயது 52). விவசாயி. இவர் மீது கந்துவட்டி தொடர்பாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. அந்த புகாரை விசாரிக்கும்படி தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி கருக்கல்வாடி சென்று மாதையன், அவருடைய மனைவி ஜோதி (47), மகன் கோபி (27) ஆகியோரை விசாரணைக்காக தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே இரும்பாலை புது மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு (30), தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாதையனிடம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் 6 மாதம் கொடுத்தேன். அதன்பிறகும் ரூ.1,000 கொடுக்க வேண்டும் என்று மாதையன் என்னை மிரட்டினார், என அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் ஆகியோர் கந்து வட்டி தடை சட்டத்தில் கீழ் மாதையனை கைது செய்தனர்.

மாதையனை போலீசார் அழைத்து சென்றது பற்றி அறிந்ததும் அந்த கிராமமக்கள் சுமார் 100 பேர் திரண்டு வந்து நேற்று காலை தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பொய்யாக ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் சென்று மாதையன் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றதாக குற்றம் சாட்டினர்.

பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story