கோவை அருகே காட்டு யானை தூக்கி வீசியதில் கட்டிட தொழிலாளி படுகாயம்
கோவை அருகே காட்டு யானை தூக்கி வீசியதில் கட்டிட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஊரப்பட்டி ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 33) வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியில் கொட்டகை அமைத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இவர், நேற்று காலை 7 மணியளவில் அங்குள்ள புதர் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு 4 வயது குட்டியானையுடன் வந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை திடீரென்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு யானை அவரைபிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து ஆண் யானை, குட்டியுடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மருதமலை பாரதியார்நகர், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை காட்டு யானை அட்டகாசம் செய்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வடவள்ளி போலீசுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனவர் குமார் தலைமையில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த காட்டு யானை, குட்டியுடன் வந்து கட்டிட தொழிலாளியை தாக்கி தூக்கி வீசியது தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் அதிகாலையில் வேலைக்கு சென்ற ரெயில்வே ஊழியர் ஒருவரை யானை மிதித்து கொன்றது. இப்போது காட்டு யானை தாக்கியதில் கட்டிட தொழிலாளி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார். ஐ.ஓ.பி. காலனி பகுதியில் யானை நடமாட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். எனவே காட்டு யானைகளை அந்த பகுதியில் இருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.