தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

காவிரியின் கிளை வாய்க்கால்களில் ஒன்றான புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் கடைமடை பகுதிகளான துவாக்குடி, பொய்கை குடி, அசூர், தேனீர்பட்டி, பூலாங்குடி, பழங்கனாங்குடி பகுதிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இந்த கிராமங்களில் வாய்க்கால் தண்ணீரை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் வராததால் இந்த பகுதிகளில் நாற்றங்கால் கூட அமைக்கப்படவில்லை.

வரத்து வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன், பொருளாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் இஸ்மாயில், தேவேந்திரன், கோவிந்தராஜ், கோபால் ரத்தினம், பெரியசாமி உள்பட ஏராளமான விவசாயிகள் வந்தனர்.

அலுவலக வாசலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கோஷம் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் சிவகுமார் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

போராட்ட முடிவில் விசுவநாதன் நிருபர்களிடம் கூறுகையில் ‘வெள்ளிக்கிழமைக்குள் கடை மடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றால் அடுத்த கட்டமாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகளின் குடும்பத்துடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.


Next Story