குருபா இனத்தை எஸ்.டி. பட்டியலில் சேர்க்ககோரி சுவர்ண சவுதா முற்றுகை
குருபா இனத்தை எஸ்.டி. பட்டியலில் சேர்க்ககோரி நேற்று ஆடுகளுடன் பெலகாவியில் சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பெங்களூரு,
மேலும், திடீரென்று போராட்டக்காரர்கள் சுவர்ண சவுதாவை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, ஆடுகளும் சுவர்ண சவுதாவை நோக்கி படையெடுத்தன. சுவர்ண சவுதா பக்கத்தில் சென்றபோது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஆடுகளுடன் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.
இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் தொடர்ந்து சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயன்றனர். இதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு–முள்ளு உருவானது.இந்த வேளையில், போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால், போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் தடியடியில் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நேற்று பெலகாவி சுவர்ண சவுதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.