சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை முற்றுகையிட்ட முதியவர்கள்


சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை முற்றுகையிட்ட முதியவர்கள்
x
தினத்தந்தி 16 Nov 2017 5:46 AM IST (Updated: 16 Nov 2017 5:46 AM IST)
t-max-icont-min-icon

வசந்தநடை கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை முதியவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றியம் வசந்தநடை கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலிங்கம், மண்டல துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் கோட்டீஸ்வரன், ஒன்றிய செயலாளர் பாபு, பொருளாளர் குமாரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன் வரவேற்றார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக நந்தகுமார் எம்.எல்.ஏ., தனித்துணை கலெக்டர் அ.அப்துல்முனீர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

வசந்தநடை கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் பெற மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டு, 52 மனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு தையல் எந்திரம், வீட்டுமனை பட்டா, வாரிசு சான்றிதழ் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது எம்.எல்.ஏ. நந்தகுமார், இந்த மனுநீதி முகாமில் முதியோர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை ஏன் வாங்கவில்லையென சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் கேட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த முதியோர்கள் எங்களிடம் மனுக்களை வாங்கவில்லை என கூறி மேடை அருகே வந்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை முற்றுகையிட்டனர். பின்னர் முதியவர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கு உங்களுக்கு (சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்) என்ன அதிகாரம் உள்ளது? பொய்கையில் இரண்டு கண்கள் இல்லாத ஒருவருக்கு 2 மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று கூறி கையிலிருந்த நிகழ்ச்சி நிரல் புத்தகத்தை வீசிவிட்டு இதற்கு விளக்கம் தெரியும் வரை விடமாட்டேன் என்று கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story