மானூர் அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் போலீசார் விசாரணை
மானூர் அருகே கிணற்றில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானூர்,
மானூர் அருகே கிணற்றில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊதுபத்தி கடை ஊழியர்மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் சின்னபிரகாஷ். விவசாயி. இவருடைய மனைவி செல்லத்தாய் (வயது 48). இவர் அரசு சார்பு நிறுவனமான சர்தோதயா ஊதுபத்தி கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு அருள்ராஜா (24) என்ற ஒரே மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சின்னபிரகாசுக்கு மது, கஞ்சா பழக்கம் இருந்ததால், அவருக்கும், செல்லத்தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். செல்லத்தாய் தனது மகன் அருள்ராஜாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கிணற்றில் பிணமாக மிதந்தார்இவர்களுக்கு சொந்தமாக ஊருக்கு அருகில் தோட்டம் உள்ளது. அங்கு காவலுக்கு 4 நாய்களை வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்களுக்கு உணவு கொண்டு செல்லும்போது, செல்லத்தாய் தன்னுடன் யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தோட்டத்துக்கு செல்ல, தனது மகன் அருள்ராஜாவை துணைக்கு அழைத்து உள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் செல்லத்தாய் தனியாக தோட்டத்துக்கு சென்றார்.
நீண்டநேரம் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் அருள்ராஜா சந்தேகம் அடைந்தார். இந்த நிலையில் ஏற்கனவே தோட்டத்தில் இருந்த சின்னபிரகாஷ் இரவில் ஊருக்குள் வந்து உறவினரான ரிச்சர்ட் என்பவரிடம் தனது மனைவி செல்லத்தாய் கிணற்றில் பிணமாக மிதப்பதாக கூறி உள்ளார். உடனே அவர் அருள்ராஜாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அருள்ராஜா தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு தனது தாய் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.
போலீசார் விசாரணைபின்னர் இதுகுறித்து அவர் மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த செல்லத்தாயின் உடலை மீட்டனர். அப்போது செல்லத்தாயின் வாயில் இருந்து விஷமருந்து வாசனை வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் செல்லத்தாயின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.