2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை


2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

குமராட்சி அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே முள்ளங்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டு நேற்று காலையில் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கிராம முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தனர். இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் கோவில் முன்பு திரண்டனர்.

கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து, கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

ரூ.50 ஆயிரம் நகை, பணம்

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்வார்கள். அவ்வாறு வருபவர்கள் பணம் மற்றும் தங்க நகையை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவார்கள். இந்த உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டது. எனவே அதில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் நகை இருந்திருக்கும். இது பற்றி தெரிந்த நபர்களே காணிக்கை இருந்த உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர் என்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு வழக்கில் தொடர் புடைய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு கோவில்

இதேபோல் அருகில் உள்ள ஒற்றபாளையம் பூந்தாலையம்மன் கோவிலிலும் திருட்டு நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது, கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த உண்டியலை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள், கோவில் உண்டியலை அப்படியே திருடிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் இருந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக குமராட்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story