தனியார் டாக்டர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்


தனியார் டாக்டர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:42 AM IST (Updated: 17 Nov 2017 4:42 AM IST)
t-max-icont-min-icon

தனியார் டாக்டர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரு,

தனியார் டாக்டர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையொட்டி தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த மாநில அரசு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதில், மருத்துவ சிகிச்சை கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தல், தவறு செய்யும் டாக்டர்களை விசாரிக்க மாவட்டங்களில் குழு அமைத்தல், நோயாளி மரணம் அடைந்தால் பணத்தை செலுத்தும்படி வற்புறுத்தக்கூடாது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13–ந் தேதி பெலகாவியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் தனியார் டாக்டர்கள் 13–ந் தேதி முதலே பெலகாவியில் சுவர்ண சவுதா அருகே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்களை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அந்த போராட்டத்தில் சில மாவட்டங்களை சேர்ந்த தனியார் டாக்டர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சில பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் கர்நாடக பிரிவு சார்பில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள சங்க அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெங்களூருவில் உள்ள தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டனர். எக்காரணம் கொண்டும் மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். மாநில அரசு தனது முடிவை வாபஸ் பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.

பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதனால் அவசர சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் தடுமாறினர்.

Next Story