ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என விரும்புகிறேன்
தனியார் மருத்துவமனைகளில் பிணத்தை வைத்துக் கொண்டு பணம் செலுத்த வற்புறுத்துகிறார்கள், நான் ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று சட்டசபையில் மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது மக்கள் விரோத திருத்த மசோதா இல்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை கவுரவ பிரச்சினையாக நான் கருதவில்லை. நான் ஒன்றும் மன்னர் குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். எல்லா துறையிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளனர். நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை எழவில்லை.
ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு ஓடிவிடும் ஆள் நான் இல்லை. தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசோதாவை இயற்றவில்லை. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் டாக்டர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற ஒரு பயமான சூழ்நிலையை சிலர் உருவாக்கியுள்ளனர். அது போல் செய்ய முடியுமா?. இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தில் தவறு செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.இந்த சமுதாயத்திற்கு தூக்கு தண்டனை வேண்டாம் என்று ரத்து செய்ய முடியுமா?. கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் அத்தகைய செயல்களை செய்ய முயற்சி செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவே அந்த தண்டனை சட்டம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் மருத்துவமனைகள் சட்ட திருத்த மசோதாவை திடீரென இங்கு தாக்கல் செய்யவில்லை.
இந்த வரைவு மசோதாவை டாக்டர்கள் சங்க நிர்வாகிகளிடம் கொடுத்து, அவர்களின் ஒப்புதலை பெற்ற பிறகே இங்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த சபையில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக நான் யாரிடமும் அனுமதி பெறாமல் இங்கு தாக்கல் செய்யவில்லை. ஜனநாயகப்படி இந்த சபையில் விவாதம் நடைபெற்ற பிறகு அந்த மசோதா நிறைவேறட்டும்.மருத்துவமனைகளில் நோயாளியின் உயிர் போன பிறகு பணம் கட்ட கஷ்டப்படும் குடும்பத்தினருக்கு உதவவே இந்த சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. முதல்–மந்திரி, மந்திரிகள் அனைவரும் முட்டாள்கள் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். தங்களின் தொழில் தர்மத்திற்கு அவமானம் செய்யக்கூடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.
டாக்டர்களை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள். இந்த நிலையில் யார் கவுரவத்தை பார்க்கிறார்கள்?. டாக்டர்களுடன் தனியார் மருத்துவ ஆய்வு கூடத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டுள்ளது?. அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளிலும் எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதத்திற்குள் செய்து முடிக்கப்படும்.வரி செலுத்துபவர்களின் நலனை காக்கவே நாங்கள் இந்த சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். வரி செலுத்துபவர்களின் பணம் விரயமாகக்கூடாது என்பதற்காக சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறோம். இது தவறா?. இந்த சமுதாயத்தில் அமைப்பு சார்ந்தவர்கள், அமைப்பு சாராதவர்கள் என்று இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு பணம் கட்ட முடியாமல் உயிரை விடுபவர்கள் அமைப்பு சாராதவர்கள்.
அவர்களுக்கு ஆதரவாக அரசு நிற்கிறது. உயிர் போன பிறகு பிணத்தை வைத்துக் கொண்டு பணம் செலுத்தும்படி தனியார் மருத்துவமனைகளில் வற்புறுத்துகிறார்கள். ஏழைகள் எப்படி பணத்தை செலுத்துவார்கள்?. அத்தகைய ஏழைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.இவ்வாறு ரமேஷ்குமார் பேசினார்.