அரசு வக்கீல்கள் நியமனத்தை தாமதப்படுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


அரசு வக்கீல்கள் நியமனத்தை தாமதப்படுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 18 Nov 2017 4:00 AM IST (Updated: 18 Nov 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு வக்கீல்கள் நியமனத்தில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரியைச் சேர்ந்த அசோக்பத்மராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 24–ன்கீழ் ஒவ்வொரு மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட கோர்ட்டுகளில் அரசு வக்கீல் நியமிக்கப்பட வேண்டும். இதுகுறித்து கலெக்டர், மாவட்ட நீதிபதி ஆகியோர் ஆலோசனை செய்து தகுதியான வக்கீல்கள் பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலில் இடம் பெறாதவர்களை அரசு வக்கீலாக நியமிக்க முடியாது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட கோர்ட்டில் கடந்த ஜூன் மாதம் அரசு வக்கீல் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விதிகளின் அடிப்படையில் நான் உள்பட பலரை கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி பரிந்துரை செய்தார்.

கலெக்டரும் எனது பெயர் உள்பட சிலரின் பெயர்களை பரிந்துரைத்தார்.

குறிப்பாக எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதால் உரிமையியல் மற்றும் குற்றவியல் பிரிவுகளுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அரசியல் தொடர்பு இல்லை என்பதற்காக எனக்கு அரசு வக்கீல் பதவி வழங்கப்படவில்லை. ஆனால் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைக்காத சிலர், அந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே அரசாணை அடிப்படையில் மாவட்ட நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருப்பவர்களை அரசு வக்கீல்களாக நியமிக்கவும், அதுவரை அந்த பணியிடங்களை நிரப்ப தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அரசு வக்கீல்களை நியமனம் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? ஐகோர்ட்டிலும் போதுமான வக்கீல்கள் இல்லை. பணியில் இருப்பவர்களும் உரிய ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில்லை. நகராட்சி, வீட்டுவசதி வாரியத் துறைகளுக்காக நியமிக்கப்படும் அரசு வக்கீல்கள் வழக்குகளில் ஆஜராவதில்லை. திறமையான வக்கீல்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. அரசு வக்கீல்கள் நியமனத்தை பொறுத்தவரை அரசு செயல்படுகிறதா, இல்லையா? 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன்?“ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story