அக்காள்–தங்கை கடத்தப்பட்ட சம்பவம்: ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் சிக்கினர்


அக்காள்–தங்கை கடத்தப்பட்ட சம்பவம்: ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 18 Nov 2017 3:00 AM IST (Updated: 18 Nov 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் அக்காள், தங்கை கடத்தப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் சிக்கினர். அவர்கள் ரூ.50 லட்சம் கொடுத்து மீட்கப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரை காமராஜர்புரம், பங்கஜம் காலனியை சேர்ந்தவர் கார்த்திகைசெல்வன்(வயது 36). இவரது மகள்கள் அனுஸ்ரீ(9), ஜெயஸ்ரீ(5) ஆகியோர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றபோது மர்மநபர்களால் கடத்தப்பட்டனர்.

இதற்கிடையில் கார்த்திகைசெல்வனுக்கு போனில் பேசிய மர்ம நபர் ரூ.1 கோடி கொடுத்தால் குழந்தைகளை விடுவிப்பதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸ் கமி‌ஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுமிகளை தேடி வந்தனர். ஆனால் அன்றைய தினம் இரவே சிறுமிகள் இருவரையும் கடத்தல்காரர்கள் ஆட்டோவில் அழைத்து வந்து வைகை ஆற்றுப்பகுதியில் விட்டு சென்றனர்.

சிறுமிகள் மீண்டும் திரும்பி வந்தது குறித்து விசாரித்தபோது, கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தில் ரூ.50 லட்சத்தை கார்த்திகைசெல்வன் கொடுத்ததால் தான் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்தது. ஆட்டோ டிரைவர் பஞ்சாட்சரத்தை பிடித்து போலீசார் விசாரித்தபோது பெயிண்டர் பாண்டி மனைவி ஜீவலதா என்பவர் சிறுமிகளை இறக்கி விட சொன்னதாக தெரிவித்தார். உடனே போலீசார் பாண்டி, ஜீவலதாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமிகள் இருவரையும் ரவீந்திரன் என்பவர் தனது வீட்டில் விட்டு சென்றதாகவும், இரவு அவர்களை விடுவிக்க சொன்னதால் விடுவித்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்துக்கு நெல்லை விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த ரவீந்திரனின் கூட்டாளி கண்ணன் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. கண்ணனை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

பிடிபட்ட பஞ்சாட்சரம், பாண்டி, ஜீவலதா, கண்ணன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவீந்திரன் சிக்கினால் தான் சிறுமிகள் பணம் கொடுத்து மீட்கப்பட்டார்களா? என்பதும், கடத்தலுக்கான காரணமும் தெரியவரும்.


Next Story