கடலூரில் எரிசாராயம் கடத்தி வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க காருடன் ஆற்றுக்குள் பாய்ந்தவர் சிக்கினார்


கடலூரில் எரிசாராயம் கடத்தி வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க காருடன் ஆற்றுக்குள் பாய்ந்தவர் சிக்கினார்
x
தினத்தந்தி 17 Nov 2017 11:00 PM GMT (Updated: 17 Nov 2017 7:08 PM GMT)

எரிசாராயம் கடத்தி வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பிக்க காருடன் ஆற்றுக்குள் பாய்ந்தவர் சிக்கினார்.

கடலூர்,

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காரில் மது கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்துவதற்கு போலீசார் சைகை காண்பித்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர். மேலும் வயர்லெஸ் மூலம் கடலூர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது. இதையடுத்து முக்கிய சந்திப்புகளில் காரை மடக்கி பிடிக்க போலீசார் தயார் நிலையில் நின்றனர்.

இந்த நிலையில் அந்த கார் பாரதிசாலை, புதுப்பாளையம், பீச்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச் நோக்கி சென்றது. போலீசார் விடாமல் துரத்தி வருவதை அறிந்த டிரைவர் அங்கிருந்து மருந்து குடோன் சாலை வழியாக மீண்டும் பீச்ரோடு வந்து வன்னியர்பாளையம் சுடுகாட்டை கடந்து கெடிலம் ஆற்றுக்குள் கார் பாய்ந்தது. கரையில் இருந்து சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு ஆற்றில் பாதியளவில் மூழ்கியபடி கார் நின்றது.

இதையடுத்து டிரைவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காரைக்கால், பூவம் கிராமம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த சண்முகம்(வயது 46) என்பதும், புதுச்சேரியில் இருந்து எரி சாராயத்தை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கார் மீட்கப்பட்டது. காரில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 15 பிளாஸ்டிக் கேன்களில் 525 லிட்டர் எரிசாராயம் இருந்தது. இந்த எரிசாராயத்தை புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சீர்காழிக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்ததாக டிரைவர் சண்முகம் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 525 லிட்டர் எரிசாராயம் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள டிரைவர் சண்முகம் ஏற்கனவே சீர்காழியில் கடந்த 2015–ம் ஆண்டு மதுபாட்டில்கள் கடத்திய வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story