சாலை வசதி செய்து தரக்கோரி அமைச்சர்–எம்.பி.க்கள் சென்ற கார்களை மறித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை வசதி செய்து தரக்கோரி திருப்பனந்தாளில் அமைச்சர்– எம்.பி.க்கள் சென்ற கார்களை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பேரூராட்சியின் 9–வது வார்டான சன்னதி தெருவின் விஸ்தரிப்பான உப்புகாரத்தெரு பகுதியில் 200–க்கும் மேற்பட்ட மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். ஒரு கோவிலுக்கு சொந்தமான இந்த நிலத்தில் வசித்து வரும் இந்த மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 12 ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் எம்.பிக்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் உள்பட அதிகாரிகள் வந்தனர். அப்போது சன்னதி தெருவில் அமைச்சர் துரைக்கண்ணு சென்ற காரை உப்புகாரத்தெருவைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் வந்த கார்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
இருப்பினும் விழா முடிந்து அமைச்சர் மற்றும் எம்.பிக்கள் வந்த கார்களை மீண்டும் பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சேதமடைந்த சாலையின் அவலத்தை அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் காரில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் கீழே இறங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் இடத்தில் குடியிருப்பதால் அரசின் பொது நிதியில் இருந்து சாலை வசதி செய்து தர முடியாது. ஒன்றிய ஆணையர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் வெள்ளையம்மாள் கூறுகையில், கோவில் நிலம் என்பதால் அரசின் பொது நிதியிலிருந்து சாலை வசதி செய்ய முடியாததால் மயிலாடுதுறை எம்.பி. பாரதிமோகன் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 17.25 லட்சத்தில் சாலை வசதி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.