தவறான சிகிச்சையால் 66 பேர் பார்வை இழந்த வழக்கில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி


தவறான சிகிச்சையால் 66 பேர் பார்வை இழந்த வழக்கில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி
x
தினத்தந்தி 17 Nov 2017 10:15 PM GMT (Updated: 17 Nov 2017 7:25 PM GMT)

தவறான சிகிச்சையால் 66 பேர் பார்வை இழந்த வழக்கில், டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி,

தவறான சிகிச்சையால் 66 பேர் பார்வை இழந்த வழக்கில், டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.

திருச்சியை சேர்ந்த ஒரு தனியார் கண் மருத்துவமனை கடந்த 2008–ம் ஆண்டு ஜூலை மாதம் பெரம்பலூரில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டம் நயினார்பாளையம், கடுவனூர், கடலூர் மாவட்டம் சித்தேரி பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்வதற்காக கலந்து கொண்டனர்.

இவர்களில் 66 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவர்களது கண்ணில் வலி உண்டாகி புண் ஏற்பட்டது. சில நாட்களில் அவர்களது பார்வை பறிபோனது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு கேட்டும், தவறாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். பின்னர் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை ஐகோர்ட்டு இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை திருச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 22–4–2015 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் தாமஸ், டாக்டர் அசோக் ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறைதண்டனை விதித்து அப்போது இருந்த நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பு அளித்தார்.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்துக்கு மிகாமலும், ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு குறையாமலும் 7.5 சதவீத வட்டியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து அவர்களது வயது மற்றும் வருவாயின் அடிப்படையில் கணக்கிட்டு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மருத்துவமனை நிர்வாகத்தினர் அப்பீல் செய்திருந்தனர். நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்னிலையில் நடந்து வந்த அப்பீல் விசாரணையின்போது, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஏற்கனவே கீழ் கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட நெல்சன் ஜேசுதாசன், கிறிஸ்டோபர் தாமஸ், அசோக் ஆகிய 3 பேருக்கும் விதித்து இருந்த தலா ஒரு வருடம் சிறைதண்டனையை உறுதி செய்தும், மேலும் பாதிக்கப்பட்ட 66 பேருக்கும் மருத்துவமனை நிர்வாகம் ரூ.9 கோடியே 85 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.


Next Story