நாடு கடந்தும், தொடரும் ‘தமிழ் பந்தம்’..!


நாடு கடந்தும், தொடரும் ‘தமிழ் பந்தம்’..!
x
தினத்தந்தி 18 Nov 2017 5:26 AM GMT (Updated: 18 Nov 2017 5:26 AM GMT)

அழிந்துவரும் தமிழ் ஓலைச் சுவடிகளை தேடுவதும், அதை டிஜிட்டல் நூல்களாக மாற்றுவதுமே சுபாஷினியின் வேலை.

மிழ் மொழியின் தொன்மைகளும், பெருமைகளும் தலைமுறை தாண்டி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறார், ஜெர்மனியை சேர்ந்த சுபாஷினி. இவர் பிறந்து வளர்ந்தது மலேசியா என்றாலும், பூர்வீகம் தமிழ்நாடு தான். தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஷினி, அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது உண்டு. அந்த பயணமும் தமிழ் மீதான தீராத காதலாகவே அமைந்திருக்கிறது. அழிந்துவரும் தமிழ் ஓலைச் சுவடிகளை தேடுவதும், அதை டிஜிட்டல் நூல்களாக மாற்றுவதுமே சுபாஷினியின் வேலை. அதற்காக தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கி, அதன்மூலம் தமிழ் மொழி, மரபு, பண்பாடு, கலாசாரம்... என பல தளங்களில் இயங்குகிறார். இவரது முயற்சியினால் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகளும், புராதன சின்னங்களும் டிஜிட்டல் வடிவில் உயிர்பெறுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும் உலகளவில் ஆவணப்படுத்தி வருகிறார். ஓலைச்சுவடிகளை தேடி, சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

* பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் வளர்ந்த நாடுகள் அனைத்துமே, பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. அவர்களது நாட்டில், அவர்களது மொழியையும், கலாசாரத்தையுமே முன்னிறுத்துவார்கள். ஆங்கிலம் கற்றிருந்த தைரியத்தில் ஜெர்மனியில் மேற்படிப்பிற்காக நான் சென்றிருந்தேன். ஆனால் அங்கு ஆங்கிலத்திற்கு துளியளவும் மரியாதை இல்லை. எங்கு திரும்பினாலும் ஜெர்மன் மொழியில் தான் எழுதப்பட்டிருக்கும். ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட, ஜெர்மனியில் தான் பேசுவார்கள். இவ்வளவு ஏன்..? ஹாலிவுட் படங்கள் ஜெர்மன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறகு தான், அங்கு திரையிடப்படும். ஜெர்மனியர்களின் பழமை போற்றும் பண்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதன் தாக்கமாகத்தான் தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க முடிவெடுத்தேன். ஏனெனில் தமிழ்நாடு, ஜெர்மனியைவிட பழமையானது. அதற்காக ஜெர்மனி வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ என்ற அமைப்பை உருவாக்கி, அழிந்துவரும் தமிழ் பாரம்பரியத்தையும், பெருமைகளையும் தேட ஆரம்பித்தோம். எங்களுடைய தேடலுக்கு நிறைய பொக்கிஷங்கள் கிடைத்தன. ஜெர்மனி, மலேசியா ஆகிய நாடுகளில் கிடைத்த ஓலைச்சுவடிகளை ‘போட்டோ காப்பி’ மூலமாக டிஜிட்டலாக்கி பாதுகாக்க ஆரம்பித்தோம்.

* தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தீர்கள்?

என்னுடைய பெற்றோரின் பூர்வீகம் தஞ்சாவூர் என்றாலும், நான் தமிழ்நாட்டிற்கு வந்ததே இல்லை. தமிழ் திரைப்படங்களில் மட்டுமே தமிழ்நாட்டை பார்த்திருக்கிறேன். திரைப்படங்களில் தமிழ் பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். அதை நம்பி, எனது தோழிகளுடன் தமிழ்நாட்டிற்கு இன்ப சுற்றுலா வந்திருந்தேன். பெரும் அதிர்ச்சி. ஏனெனில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களை, ஆங்கில மொழி ஆக்கிரமித்திருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதுமே... ஆங்கில மொழியோடு ‘டேக் ஆப்’ ஆகிவிட்டோம்.

சிதம்பரம், தஞ்சாவூர், காஞ்சீபுரம்... என தமிழக கலை களஞ்சியங்களை ரசித்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் முறையில் சேகரித்தோம். ஒருசில நாட்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கினோம். இந்த வெற்றி... என்னை மீண்டும் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. 1995-ம் ஆண்டு தொடங்கிய தேடல் பயணம் இன்றும் தொடர்கிறது. 22 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தேடலோடு வந்து திரும்பிக்கொண்டிருக்கிறேன்.

* ஓலைச்சுவடிகள் எங்கு அதிகமாக இருக்கின்றன?

தமிழ்நாட்டில் தான் அதிக ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. இங்குள்ள சைவ சமய மடங்களில் ஏராளமான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஒருசில குடும்பங்களும், ஓலைச்சுவடிகளை குடும்ப சொத்தாக பாதுகாக்கிறார்கள். அதேசமயம்..., ஜெர்மனி நாட்டிலும் தமிழ் ஓலைச் சுவடிகள் அதிகமாக இருக்கின்றன. ஆம்..!, பிரான்ஸ் நேஷனல் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளுக்காகவே பிரத்யேக பகுதி ஒதுக்கப்பட்டிருக் கிறது. அங்கு எண்ணிலடங்கா ஓலைச்சுவடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படி என்கிறீர்களா..? கிறிஸ்துவ இலக்கியங்களையும், காப்பியங்களையும் எழுதிய வீரமாமுனிவரின் கைவரிசையில் தான் ஏராளமான ஓலைச்சுவடிகள் அங்கு பாதுகாக்கப்படுகிறது. அவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகளையும் அங்கு காட்சிக்கு வைத் திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பிரெஞ்சு படைகள் நாடு திரும்புகையில், இந்தியாவில் இருந்து பல புதையல் பெட்டிகளையும் கொண்டுவந்தார்கள். அதிலிருந்த ஓலைச்சுவடிகளையும் பத்திரமாக பாதுகாக்கிறார்கள்.

* இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஓலைச்சுவடிகள் பத்திரமாக இருக்கிறதா?

வெளிநாட்டவர்கள் பாரம்பரியத்தை உணர்ந்தவர்கள். அவர்கள் ஓலைச்சுவடிகளின் மதிப்பை உணர்ந்து தான் எடுத்து சென்றிருக்கிறார்கள். அப்படி கொண்டு செல்லப்பட்ட அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் ஓலைச் சுவடிகளுக்கு பிறப்பிடமான இந்தியாவில் தான் அவை அதிகமாக அழிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியம், சமயம், மருத்துவம், தொழில், அறிவியல், வானிலை அறிவியல், கலாசாரம்... என ஏராளமான வகைகளில் ஓலைச்சுவடிகள் எழுதப்பட்டிருந்தன. சரா சரியாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் நம்மிடம் மிகக்குறைந்த அளவிலான ஓலைச்சுவடிகள்தான் இருக்கின்றன. ஏனெனில் சமய சண்டைகளிலும், கருத்து வேறுபாட்டிலும் ஏராளமான ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதில் எஞ்சியவற்றைதான் நாம் பாதுகாக்கிறோம்.

* வெளிநாடுகளில் இருக்கும் ஓலைச்சுவடிகளை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாதா?

அது முடியாத காரியம். கண்ணாடி கூண்டிற்குள் இருக்கும் சுவடி களை பார்க்கலாம். பூதக்கண்ணாடிகளை வைத்து படிக்கலாம். அதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். அதை தொட்டு பார்ப்பதற்கு கூட நமக்கு அனுமதி இல்லை.

* எத்தனை சுவடிகளை, டிஜிட்டல் முறையில் ஆவணப் படுத்தியிருப்பீர்கள்?

கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுவடிகளை போட்டோகாப்பியாக ஆவணப்படுத்தியிருப்போம். ஓலைச்சுவடிகள் மட்டுமின்றி அழியும் தருவாயில் இருக்கும் பழங்கால கோவில்கள், கல் தூண்கள், புத்தகங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றையும் ஆவணப் படுத்துகிறோம். ஒருசில ஓலைச்சுவடிகள் மடித்து வைத்த நிலையில் நொறுங்கியிருக்கும். அதை நுணுக்கமாக கையாண்டு, முழு ஓலைச்சுவடியாக மாற்றியிருக்கிறோம். எங்களை பொருத்தமட்டில்..., தமிழ் பாரம்பரியம் அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும்.

* இளைய சமுதாயத்திடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

வரலாற்றின் சிறப்புகளை இளைய தலைமுறையினர் முழுமையாக புரிந்து கொள்ளாததால் தான், அவை பல விதங்களில் சிதைக்கப்படுகிறது. விளையாட்டாக உடைப்பதும், எழுதுவதும், கிறுக்குவதுமாக வரலாற்று சின்னங்களை சிதைக்கிறார்கள். இந்த தவறை பள்ளிப்படிப்பின் போதே அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதை தான் அழுத்தமாக பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து பேசுகிறேன். தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து, வரலாறு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறேன். 

Next Story