தூத்துக்குடியில் வ.உ.சி. பெயரில் ரூ1. கோடியில் அருங்காட்சியகம் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


தூத்துக்குடியில் வ.உ.சி. பெயரில் ரூ1. கோடியில் அருங்காட்சியகம் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 18 Nov 2017 9:00 PM GMT (Updated: 18 Nov 2017 12:26 PM GMT)

தூத்துக்குடியில் வ.உ.சி. பெயரில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வ.உ.சி. பெயரில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வ.உ.சி. நினைவு நாள்

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயக்குமார், துணை தலைவர் நடராஜன், துறைமுக சபை உறுப்பினர்கள் கதிர்வேல், ராஜகண்ணு, பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

அருங்காட்சியகம்

நான் வ.உ.சி.யின் குருபூஜையில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். தூத்துக்குடி பீச் ரோட்டில் வ.உ.சி. பெயரில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணி வ.உ.சி.யின் அடுத்த குருபூஜை தினத்துக்குள் முடிவடையும். அந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது 14.10 மீட்டர் ஆழம் உள்ளது. இதனை 16.05 மீட்டராக ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் நடந்து வரும் இந்த பணியை, 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவ்வாறு ஆழம் அதிகப்படுத்தும்போது தற்போது துறைமுகத்தில் கையாளுகிற 60 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களுக்கு மாற்றாக இருமடங்கு அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்கள் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம் துறைமுகத்தின் வணிகமும், சரக்கு கையாளும் திறனும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் தென்பகுதியில் உலக வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும். தூத்துக்குடி துறைமுகத்தின் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்ட பின்னர், வெளித்துறைமுக பணிகள் தொடங்கும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஓட்டப்பிடாரம்

முன்னதாக ஓட்டப்பிடாரம் பஜாரில் உள்ள வ.உ.சி. சிலைக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது. கோவையில் கவர்னர் சோதனை செய்யவில்லை அரசு நிர்வாகம் தொடர்பாகத்தான் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இதனை மாநில அமைச்சர்கள் வரவேற்று உள்ளனர்.

போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை என்பது அரசியல் தலையிடு கிடையாது. வரிமான வரி சோதனையை ஒரு குடும்பத்தின் பார்வையில் பார்க்க கூடாது. தவறான முறையில் சொத்து சேர்த்தவர்கள் வீடுகளில் மட்டுமே வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story